About us
மாதா அப்போஸ்தலர்கள் சபை (Society of Apostles of Mary)
மார்ச் 2008-ல் காலஞ்சென்ற தூத்துக்குடி மேற்றிராசன குருவானவராகிய சங்.
அந்தோனி சேவியர் சுவாமி அவர்களின் நெடுநாள் விருப்பங்களில் ஒன்றும், அவைகளில் முதன்மையானதும், “மரியாயின் மீது ஆழ்ந்த உண்மையான பக்தியைத்” தமிழகக் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் மத்தியிலே வேரூன்றச் செய்வதாகும்.
பசாசானது நவீனர்களின் போதனைகளின் மூலமாக இந்த இரட்சணியத்தின் அடையாளத்தை அகற்ற முயற்சி எடுத்தபோது, நம் சுவாமி அவர்கள் பாத்திமா செய்தியை முழுவதும் உள்வாங்கி, மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியின் அவசியத்தை உணர்ந்து, பரிகார உணர்வோடு வாழ்ந்து, அதன் மூலம் உத்தமதனம் அடைவதன் மூலமும், அத்திரு இருதயத்திற்கு ஆறுதல் அளிப்பதன் மூலமும், இந்த பரிகார பக்தியைப் பரப்பி, அதன்படி வாழ விசுவாசிகளைத் தூண்டுவதன் மூலமும் இந்த நவீனம் என்னும் அசுத்தப் பிரளயத்திலிருந்து விசுவாசிகளைக் காப்பாற்றி சேசுவின் விருப்பப்படி,
“ஒன்றிணைந்த சேசு மரியாயின் நேச இருதயங்கள்” என்ற நோவாவின் பெட்டகத்தில் பயணித்து மோட்சத்தை நோக்கி அவர்களை வழிநடத்த முடியும் என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார்கள்.
இந்த மாபெரும் இரட்சணியத்தின் செய்தியை வாழ்ந்து, அதன்மூலம் அர்ச்சிய சிஷ்டதனம் அடையவும், இதைப் பரப்புவதற்காக ஆண்களுக்கான ஒரு துறவற சபை யையும் (மாதா அப்போஸ்தலர்கள் சபை), பக்தி நிறைந்த பெண்களுக்கு மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்து ஜெப வாழ்வில் அர்ச்சியசிஷ்டதனம் அடைய ஒரு கன்னியர் சபையையும் ஸ்தாபிக்க விரும்பினார்கள்.
இந்தக் காலத்தில் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, அந்த பரிகார பக்தியைப் பரப்புவதற்கு, “மாதாவுக்கோர் மலர்” என்ற பத்திரிகையைத் தொடங்கி, கத்தோலிக்க விசுவாசத்தையும், போதனை களையும் பரப்பும் கருவியாக அதைப் பயன்படுத்தினார்கள். விரைவில் அநீத கண்டனங் களுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளானது இந்தப் பத்திரிகை. ஏனென்றால் நவீனத் தப்பறையைக் கடவுளின் அதிமிக மகிமைக்காக எதிர்த்துக் குரல் எழுப்புவது காலத்தின் கட்டாயமாக ஆகிவிட்டதால், வந். லெபவர் ஆண்டகை 1970 முதல் திரிதெந்தீன் பலிபூசை யையும், கத்தோலிக்க குருத்துவத்தையும், விசுவாசத்தையும் காப்பாற்ற வேதசாட்சியாக மரிப்பதற்குக் கூட தயங்காதது போல் நமது சங். அந்தோனி சேவியர் சுவாமி அவர்களும் “மாதாவின் பரிகார பக்தியையும் விசுவாசத்தையும்” காப்பாற்ற எந்தத் துன்பத்தையும் சேசுவுக்காகவும் மாதாவுக்காகவும் ஏற்றுக்கொள்ளத் தயாரானார்கள்.
1985-ல் சர்வேசுரனுடைய தேவ பராமரிப்பானது வந். லெபவர் அதிமேற்றிராணியார் ஸ்தாபித்த அர்ச். பத்தாம் பத்திநாதர் குருக்கள் சபையின் சங். பத்ரீஸ் லா ரோச் என்னும் குருவானவரைச் சந்திக்கும் வாய்ப்பை சங். அந்தோனி சேவியர் சுவாமிக்கு வழங்கியது. அந்த நேரத்திலே பாரம்பரிய இலத்தீன் பூசையின் மகத்துவத்தையும், அதன் மேன்மையையும், விசுவாசம் களங்கப்படுத்தப்படுவதை அந்தத் திவ்ய பலிபூசை தடுத்து வந்ததையும் நம் சுவாமி அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டார்கள். இந்த மாபெரும் சந்திப்பு சங். அந்தோனி சேவியர் சுவாமிக்கு இன்னொரு பாக்கியத்தையும் அளித்தது. அதாவது, விசுவாச சத்தியங் களைக் காப்பாற்றுவதும், இந்த பலிபூசையைக் காப்பாற்றுவதும் இரட்சணியம் அடை வதற்குத் தேவை என்பதை நன்றாக உணர்ந்து, இந்த மேன்மையான காரியங்களுக்காகவும் போராட பொன்னான வாய்ப்பை நம் சுவாமி அவர்கள் பெற்றுக்கொண்டு, அதைத் தமிழ்க் கத்தோ லிக்க மக்கள் மத்தியில் பரப்பும் பணியையும் தனதாக்கிக் கொண்டார்கள். இந்தக் காலத் திலேதான் அர்ச். 10-ம் பத்திநாதர் சபையானது, “பிரிவினை சபையல்ல, பதித சபையுமல்ல” என்ற மாபெரும் உண்மையானது தமிழகக் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் மத்தியில் பரவ “மாதாவுக்கோர் மலர்” தமிழ்மொழியில் இந்தியாவில் உரக்கச் சொல்லும் குரலாக மாறக் காரணமாக இருந்தவர் நம் சங். சுவாமி அவர்கள் மட்டுமே.
இந்தக் காலங்களிலே மாதாவின் அப்போஸ்தலர்கள் சபையானது ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்குத் துணையாகப் பொதுநிலையினர் உருவாக்கப்பட்டு, அவர்கள் மாதா அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென்றும் அவர் விரும்பினார். பெண்களின் பரிகார சபையைத் தொடங்கவும் ஆயத்தங்கள் இக்காலத்தில் செய்யப் பட்டன. தனியாக ஓர் அச்சகம் தேவை என்பதை உணர்ந்த நம் சுவாமி, “மாதாவின் சூசை அச்சகம்” என்ற ஒரு கத்தோலிக்க அச்சகத்தை 2000-ல் தொடங்கினார்கள். பரிகார பக்தியைப் பரப்பும் பத்திரிகை மற்றும் கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்பும் புத்தகங்களும், ஆன்மீக வாழ்வுக்குரிய புத்தகங்களும் இந்த அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட வேண்டு மென்று சுவாமியவர்கள் விரும்பினார்கள். இதில் கிடைக்கும் வருமானம் மாதாவின் அப்போஸ்தலர்கள் சபைக்குப் பராமரிப்பாக இருக்க வேண்டும் என்பது சுவாமி அவர்களின் விருப்பமாக இருந்தது. இந்தக் காலத்தில் இருபால் துறவியர்களுக்கும் ஸ்தாபகரும், ஆன்ம குருவுமாகிய சங்.
அந்தோனி சேவியர் சுவாமி அவர்களே துறவறப் பயிற்சியை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அவர்களை ஞான வழியில் நடத்தி, பரிகார பக்தி மூலம் தங்களை அவர்கள் அர்ச்சியசிஷ்ட வழியில் நடத்தி, பிறரையும் அவர்கள் அர்ச்சியசிஷ்டதனத்தில் வளர உதவும் இரகசியத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுத் தார்கள். தமது மறைவுக்குப பின் இந்த இரு துறவற சபைகளும் பொதுநிலையில் உள்ள அப்போஸ்தலர்களும் தங்களது ஆன்மீகத் தேவைகளை உத்தம பலிபூசை மற்றும் கத்தோலிக்க விசுவாசத்திற்குப் பாதுகாவலாகத் திகழ்ந்த அர்ச். பத்தாம் பத்திநாதர் குருக்கள் சபையில் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். சில வருடங்கள் சுகமில்லாமல் இருந்தபின், 2008 மார்ச் 27 அன்று, நம் சங். அந்தோனி சேவியர் சுவாமியவர்கள் இந்த உலகத்தை விட்டுச் சென்றபிறகும், அவர்களின் ஆலோசனைகளின்படியே, அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை குருக்களின் வழிகாட்டுதலின்படி நம் இருபால் துறவிகளின் சபை உறுப்பினர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்கும் துறவறப் பயிற்சிக்கும் அவர்களது வழிகாட்டுதலை பக்தி சிரத்தையோடு ஏற்றுக் கொண்டார்கள். இக்காரணத்திற்காகவே இருபால் சபையின் உறுப்பினர்களுக்கு அர்ச். பத்தாம் பத்திநாதர் சபைக் குருக்கள் பாரம்பரிய திவ்யபலி பூசையை நிறைவேற்றி பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில் அவர்களின் ஆன்ம தேவைகளை நிறைவேற்றி, இன்று வரை அவர்கள் விசுவாசத்திலும் பக்தியிலும் வளரக் காரணமாக இருந்தார்கள். துறவறப் பயிற்சிக்கான வகுப்புகளும் இவர்கள் நம் இருபால் துறவிகளுக்குக் கொடுத்து வந்தார்கள். எங்களது 13 ஆண்டுகால நட்பானது (2008 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரை) எங்களால் முடிந்த சிறு உதவிகளை அவர்களுக்குச் செய்யவும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. (போர்டிங் சிறுவர்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு உதவியாக இருந்த அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையின் நட்புக் குருவானவர் ஒருவரைப் பராமரிப்பது போன்ற உதவிகள்.)
கடந்த காலங்களில், 1985 முதல் நாங்களும் எங்கள் ஸ்தாபகரும் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபைக் குருக்களுடன் நட்போடு செயல்படக் காரணமாக இருந்த சங். பத்ரீஸ் லாரோச் (Fr. Patrice Laroche) சுவாமியவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து அவருக்காக ஜெபிக்கிறோம்.
